×

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் ஸ்வியாடெக்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் செக் குடியரசின் அனுபவ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதிய ஸ்வியாடெக் (3வது ரேங்க்) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் கேத்தி ஸ்வானை (யு.கே) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது. ரஷ்யாவின் சாம்சனோவா தனது 2வது சுற்றில் சக வீராங்கனை டயானா ஷ்னெய்டரை 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அட்ரியன் மன்னரினோவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். ஸ்பெயினின் ரபேல் ஜோடர், டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஜான் லெனார்ட் ஸ்ட்ரப் (ஜெர்மனி) ஆர்தர் பெரி (யு.கே) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாம்ப்ரி தோல்வி: ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நியூசிலாந்தின் மைகேல் வீனஸ் உடன் ஜோடி சேர்ந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் யுகி பாம்ப்ரி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) தியோடர் வினிகர் (யுஎஸ்) ஜோடியிடம் தோல்வியைத் தழுவினார். ஸ்ரீராம் பாலாஜி மார்செலோ டெமோலினர் (பிரேசில்) ஜோடியும் 6-3, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் சாண்டர் கில்லி (பெல்ஜியம்) செம் வெர்பீக் (நெதர்லாந்து) இணையிடம் தோற்றது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

Tags : Swiatek ,Wimbledon ,London ,Ika Swiatek ,Karolina Pliskova ,
× RELATED ரன்கள் குவித்த இந்தியா… ஆட்டத்தை...