×

பூந்தமல்லி அருகே பரபரப்பு; ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு: வீதியில் பொருட்களுடன் பெண்கள் கண்ணீர்

 

சென்னை: பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர் பிரதான சாலை பகுதியில் வீடுகள், தனியார் பள்ளி, கடைகள், கம்பெனிகள் என 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும் இங்கு குடியிருப்பவர்கள் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் போன்றவை குட்டை புறம்போக்கு என்று அடையாளம் காணப்பட்டு அவற்றை இடித்து அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பூந்தமல்லி வட்டாட்சியர் உதயம் தலைமையில் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.‌ இதில் 3 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்ததால், அதில் குடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதனை தொடர்ந்து வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சிறிது நேரம் வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் அழுது கொண்டே வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து வந்து அருகில் இருந்த குப்பை மேட்டில் குவித்து வைத்தனர். மேலும் வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்து கைக்குழந்தைகளுடன் பெண்கள் கதறி அழுதனர். இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்து பள்ளி மாணவிகள் நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகளை கண்ணீரோடு வெளியே அள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கௌதமன் தலைமையில் அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்காக அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார். மேலும் தவெகவினர் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து தவெகவினர் மற்றும் குடியிருப்பு வாசிகள் பூந்தமல்லி-குமணன் சாவடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் குடியிருந்து வருகிறோம். உரிய ஆவணங்கள் வைத்துள்ளோம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் குட்டை புறம்போக்கு என்று கூறி வீடுகளை இடித்து வருகின்றனர். வீட்டில் உள்ள பொருட்களைக் கூட எடுப்பதற்கு அவகாசம் தராமல் வீட்டில் பொருட்கள் இருக்கும்போதே இடித்து தள்ளுகின்றனர். அதிகாரிகளின் இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரே நாளில் நாங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம். இனி நாங்கள் எங்கே போவோம். குழந்தை குட்டிகளுடன் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி கண்ணீர் மல்க அழுதபடி தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, குட்டை புறம்போக்கு என்று வீடுகளை இடித்து அகற்றுவது போல் இந்த பிரதான சாலையும் குட்டை புறம்போக்கில் தான் அமைந்துள்ளது. இந்த சாலையையும் இடித்து அகற்ற வேண்டும். அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இந்த வழியாக அதிகாரிகள் பொதுபாதை அமைத்துக் கொடுத்துள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம். நீதிமன்ற உத்தரவு என்று கூறி வீடுகளை அகற்றுகிறார்கள்‌. அதேபோல் குட்டை புறம்போக்கு நிலத்தில் போடப்பட்டுள்ள இந்த சாலையையும் அகற்ற வேண்டும். மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளை இடித்து விட்டு அந்த இடத்தை அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் வேதனையுடன் கூறினர்.

இதற்காகவா விஜய்க்கு ஓட்டு போட்டோம்‌
மாற்றம் வேண்டும் என்று நாங்கள் குடும்பத்தோடு விஜய்க்கு ஓட்டு போட்டோம். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் எங்களை குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்கள். இந்த மாற்றத்தையா நாங்கள் கேட்டோம். இனிமேல் நாங்கள் எங்கே செல்வோம். கைக்குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களுடன் குப்பை மேட்டில் உட்கார்ந்து உள்ளோம். ஒரே நாளில் எங்கள் வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது அவ்வப்போது மழை வேறு பெய்கிறது. இந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியவில்லை.

உடனடியாக எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதுடன் வேறு பகுதியில் மாற்று இடம் அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரம் மிக்கவர்கள், வசதியானவர்கள் கட்டியுள்ள ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா. ஏழை மக்கள் குடியிருப்பு தான் இவர்களின் கண்களுக்கு தெரிகிறதா. இதற்காகவா நாங்கள் ஓட்டுப் போட்டோம்‌. எங்கள் கண்ணீருக்கெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் காலம் வரும் என்று பெண்கள் வேதனையுடன் அழுதபடியே தெரிவித்தனர்.

Tags : Poonthamali ,Chennai ,Poontamalli ,Poonthamalli ,Gopurasanallur ,
× RELATED ரன்கள் குவித்த இந்தியா… ஆட்டத்தை...