பாடாலூர், ஜூலை 2: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(35). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் பெரியசாமி(60). நேற்று முன்தினம் இவர் இயற்கை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தில் பெரியசாமியின் உறவினரான சரவணன் கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தின்போது, இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் வழிகளில் சரவணன் வெடி வைத்துள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக வெடி, சரவணன் கால் மீது விழுந்து வெடித்துள்ளது.
இதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த சரவணனிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
