×

பெட்ரோல், டீசல் விற்பனை விலையை குறைத்த Nayara நிறுவனம்

சென்னை: தனியார் எண்ணெய் நிறுவனமான Nayara, நாடு முழுவதும் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலையை அதிகரித்த நிலையில் தற்போது விநியோகம் சீராகியுள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் சீராகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடு நீங்கி, எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 73.25 முதல் 73.51 அமெரிக்க டாலர் வரை வர்த்தகம் ஆகிறது. அதேபோல் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் 69.81 முதல் 70.12 அமெரிக்க டாலர் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் தோராயமாக ரூ.6,669 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றா நயாரா பெட்ரோல் பங்குகள் நிறுவனம் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இந்த புதிய விலை குறைப்பு, நாடு முழுவதும் உள்ள அதன் 7,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்களின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பங்குகளின் உண்மையான சில்லறை விலை மாறுபடும் என்று நயாரா நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பெட்ரோ லிட்டருக்கு ரூ.107.76க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 க்கு விற்பனையாகிறது. மற்ற ஊர்களில் சற்றே மாறுபடும்.

முன்னதாக, ஈரான் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தபோது, கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை ரூ.5-மும், டீசல் விலையை ரூ.3-மும் உயர்த்தி இருந்தது. அதன் பின்னர் மே மாத பிற்பாதியில் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.7.50 வரை உயர்த்தியிருந்தன. தற்போது நயாரா நிறுவனம் மார்ச் மாதம் உயர்த்திய விலையை அப்படியே குறைத்துள்ளது .

Tags : Nayara ,Chennai ,Gulf ,
× RELATED ஆந்திராவில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு