மதுரை: மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சக்கிமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாலை 5 மணியளவில் பெண்கள் கூட்டம் குவிந்தனர். தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் இதோ வந்துவிட்டார்; அதோ வந்துவிட்டார் என கூறி கூட்டத்தை காக்க வைத்தனர். சேலை வாங்கும் ஆவலில் பெண்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சிலர் பொறுமையிழந்து கிளம்பியும் சென்றனர். இரவு 9 மணிக்கு பிறகு எம்எல்ஏ கார்த்திகேயன் அங்கு வந்தார்.
பொதுமக்கள் அதிருப்தியைப் பார்த்த அவர் மேடை ஏறி பேசத் தொடங்கினார். அப்போது, ‘ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன். 7 மணிக்காவது வந்திருக்கணும். மதுரை கொட்டாம்பட்டியில் விஜய் பிறந்தநாள் விழாவை தவிர்க்க முடியல. இங்கே மேடையை விட்டு யாரும் இறங்கல… நாமெல்லாம் யாரு? டிவிகே பயலுகடா… தெறிக்க விடுவோம்… பதற விடுவோம். பொறுமையா காத்திருந்தீங்க.. ஒவ்வொருவரும் வரிசையாக வந்து நலத்திட்ட உதவிகளை வாங்கிட்டு போங்க. இப்போ இரவு 9 மணியாகப் போகுது. நடுராத்திரி 12 மணிக்கே நீங்க வீடு போனாலும் பெண்கள் தைரியமாகப் போகலாம். சிங்கப்பெண் சிறப்பு திட்டம் இருக்குது. ஒருத்தரும் தொட முடியாது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து நலத்திட்ட உதவியைப் பெறுவதற்காக பெண்கள் முண்டியடித்தபடி மேடையை நோக்கி வந்ததில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக்கண்ட எம்எல்ஏ, கார்த்திகேயன் மேடையிலிருந்து கீழிறங்கி வந்து, ‘நீங்கள்லாம் 4 மணி நேரம் பொறுமையாக இருந்தீங்கள்ல.. 4 நிமிடம் இருக்க மாட்டீங்களா? பின்னால பார்த்தீங்களா எவ்வளவு நெரிசல்? ஏதாவது நடந்துச்சுன்னா என்னாகும்? கரூர்ல 41 பேர் செத்துப்போயிட்டாங்களா இல்லையா? அப்படி ஆயிடக்கூடாதுல, பொறுமையா இருக்கணும். வேணுன்னா வீட்டிலேயே கொண்டு வந்து தர்றோம்….’ என்று பேசினார்.
கரூர் தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் தாமதமாக வந்ததால் ஏற்பட்ட நெரிசலே காரணம் என்பதை வாக்குமூலமாக எம்எல்ஏ பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தவெகவின் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பல மணி நேரம் பொதுமக்களை காக்க வைத்தபிறகே நிகழ்ச்சிகளுக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சரியான நேரத்திற்கு செல்லாமல் காத்திருக்க வைத்து, அப்பாவி பொதுமக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்படச் செய்வதற்கும், கரூர் சம்பவத்திற்கும் எள்ளளவும் வித்தியாசமில்லை என சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
