×

கோடை டிப்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

*கோடையில் நீர்க்கடுப்பு சிலருக்கு ஏற்படும். அப்போது ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடித்தால் உடனே நீர்க்கடுப்பு மறையும்.

*வெயிலில் போகும்போது தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு போக வேண்டும். தலை சூடாவதை அது தடுக்கும். தலை சூடானால் உடம்பு பாதிக்கும்.

*வெள்ளரிக்காயை அரைத்து உடல் முழுவதும் தடவி வைத்திருந்து குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

*நெல்லிக்காயை கீற்று கீற்றாக வெட்டி 10 நாட்கள் நிழலில் வைத்தால் நன்கு உலர்ந்து விடும். அதை வெயில் நாட்களில் வெளியே போகும்போது தாகம் எடுத்தால் ஒரு கீற்றை வாயில் எடுத்துப் போட்டால் தாகம் தணியும். உடலுக்கும் நல்லது.

*வெயிலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து, குடையை பிடித்துக் கொண்டு செல்வது நல்லது. குடை இல்லாவிடில் ஒரு மெல்லிய சிறு ஸ்கார்ப் ஆவது தலையில் கட்ட வேண்டும்.

*வெயிலில் செல்லும் முன் ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கலந்து குடித்தால் தலை சுற்றல், வாந்தி வராது.

*உடல் சூட்டினை தணிக்க இரவு மோரில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை குடித்தால் உடல் சூடு தணியும்.

*கோடையில் சிந்தடிக் ஆடைகளை தவிர்த்து, காட்டன் ஆடை மற்றும் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

*கேரட், கோஸ், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி இவற்றை அதிகமாக உண்பது நல்லது.

*படுக்கை அறை ஜன்னல் அளவில் பழைய காட்டன் துணியை மாட்டி அதில் சந்தனத்தை நீரில் கரைத்து தெளித்து எப்போதும் ஈரமாக இருக்கும்படி செய்தால் அந்த அறை மணமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

*பாலில் சில துளிகள் எலுமிச்சம் சாறு கலந்து வெயிலால் கருத்துப் போன முகத்தில் தேய்ப்பது நல்லது.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி

Tags : Kumkum ,
× RELATED பதின்பருவத்தினரைத் தாக்கும் B.P