அண்ணாநகர், ஜூன் 30: கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, காய்கறி, பழங்களுக்கான தனித்தனி அங்காடிகள் உள்ளன. இங்கு, வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு தினசரி லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.20 மணி அளவில் மார்க்கெட்டில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட போதிலும் நீண்ட நேரமாக மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. இதனால் அதிகாலை வேளையில் காய்கறி மூட்டைகளை இறக்க முடியாமல் தேக்கம் உருவானது.
குறிப்பாக, இருள் சூழ்ந்த சூழலில் காய்கறி மூட்டைகளைச் சுமந்து செல்லும் சுமைதூக்கும் தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர். மின்சார விநியோகம் நீண்ட நேரமாக சீரமைக்கப்படாத நிலையிலும், பொழுது விடிந்த பிறகு கிடைத்த சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். பரபரப்பாக இயங்கும் ஆசியாவின் முக்கிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேட்டில், இத்தகைய மின்வெட்டுப் பிரச்னை தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறும் வியாபாரிகள், மின்வாரியம் இப்பகுதியில் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
