அரியலூர், ஜூன் 30: அரியலூர் கலெக்டர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மிருணாளினி, அறிவுறுத்தலின்படி முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 575 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு காதொலி கருவி, 1 மாற்றுத்திறன் சிறுவனுக்கு நிற்க உதவும் பயிற்சி உபகரணம் மற்றும் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு எல்போ ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் யோகஜோதி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
