பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணைய வழி பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 2ம்தேதி தொடங்குகிறது. காலிப் பணியிட விவரங்கள் இன்று (29ம்தேதி) வெளியிடப்படும். பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026- 2027ம் கல்வி ஆண்டிற்கான பணி நிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை-2ம்தேதி முதல் 16ம்தேதி வரை EMIS இணைய வழி மூலம், பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள ஆர்.சி பாத்திமா தொடக்கப்பள்ளி வளாகத்தில் தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்களுக்கான பணிமாறுதல் கோரும் விண்ணப்பங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தவர்களில் இறுதி முன்னுரிமை பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் இன்று (29ம்தேதி) வெளியிடப்படும். தொடர்ந்து வரும் ஜூலை 2ம்தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு, கல்வி மாவட்டத்திற்குள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள்ளாக மதியமும் நடைபெறும். 3ம்தேதி இடை நிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள்ளாக மதியமும் நடைபெறும். 5,6,7 தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 8ம்தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்கு உள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்கு உள்ளாக மதியமும் நடைபெறுகிறது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 9ம்தேதி நடக்கிறது. 10ம்தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற் குள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்கு உள்ளாக மதியமும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11,13,14 தேதிகளில் நடைபெறுகிறது. 15ம்தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்கு உள்ளாக மதியமும் நடைபெறுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 16ம்தேதி நடைபெறுகிறது என பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
