கணவர் உடனான விவாகரத்து முடிந்தாலும் கூட காதலும், ரொமான்ஸும் அப்படியே இருக்கு!: பாஜக எம்பி மகளான நடிகை ஓபன் டாக்

 

மும்பை: விவாகரத்திற்குப் பிறகு தனது காதல் வாழ்க்கை குறித்து நடிகை ஈஷா தியோல் மனம் திறந்துள்ளார். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தர்மேந்திரா மற்றும் பாஜக எம்பியான நடிகை ஹேமமாலினி தம்பதியின் மகளான நடிகை ஈஷா தியோல் (43), தொழிலதிபர் பாரத் தக்தானியை நீண்டகாலமாக காதலித்து கடந்த 2012ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராத்யா மற்றும் மிராயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சுமார் 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024ம் ஆண்டில் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பிரிவிற்குப் பிறகு, ஈஷா தியோல் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். விவாகரத்திற்குப் பின் தனது தற்போதைய மனநிலை குறித்து பேட்டியளித்த ஈஷா தியோல், தனக்கு இன்னும் காதல் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘காதலும் ரொமான்ஸும் ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். விவாகரத்து போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்தாலும், அது காதல் மீதான எனது பார்வையை மாற்றவில்லை.

எனது பெற்றோர் தர்மேந்திரா மற்றும் ஹேமமாலினி ஆகியோருக்கு இடையே இருந்த நிபந்தனையற்ற காதலைப் பார்த்து வளர்ந்தேன். திரைத்துறையில் இருப்பதால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளிக்கு வந்துவிடுகிறது, ஆனால் எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டியுள்ளது’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Related Stories: