×

வாங்க வந்து பனை, தென்னை மரம் ஏறுங்க.! வயல்ல எறங்கி வேலை செய்ங்க – அமைச்சருக்கு மதுரை விவசாயிகள் பகிரங்க சவால்

மதுரை: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது தவெக அரசு கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட ஆட்சியர் முன் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன வாக்குறுதி கொடுத்ததோ அதை தானே செய்ய கோரி நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இதில் எதிர்கட்சியினரின் தூண்டுதல் எங்கே வந்தது? என்று சராமரியாக கேள்வி எழுப்பி விவசாயிகளுக்கு அரணாக இருப்பேன் என்று கூறிய தற்போதைய முதல்வர் சொன்ன கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எங்களின் வலி, வேதனை தெரியாமல் நாங்கள் நடத்தும் போரட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் என்று வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே மதுரையில் மதுரை மாவட்ட விவசாயிகளின் மாதாந்திர குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழக அரசு விவசாய பயிர்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எழுதப்பட்ட பதாகைகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், விவசாயத்தை காட்டிலும் விளையாட்டு துறை கடினம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்பு ஒரு நிகழ்வில் கூறியதை குறிப்பிட்டு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய விவசாயிகள் நாங்கள் அமைச்சருக்கு சவால் விடுகிறோம், களத்திற்கு வந்து விவசாயத்தில் ஈடுபட சொல்லுங்கள். தென்னை, பனை மரங்களில் அவரை ஏற சொல்லுங்கள், பல இடங்களில் தற்போது மாடுகளை கொண்டு ரேஸ் நடக்கிறது. அதில் பங்கேற்று மாடுகளை கொண்டு ஏறி, இறங்கி நீண்ட தூரம் ரேஸ் செய்ய சொல்லுங்கள், கோயில் மாட்டை அடக்க சொல்லுங்கள். இல்லை என்றால் ஒரு முழு நாள் வயலில் இறங்கி விவசாய பணிகளை செய்ய சொல்லுங்கள்..இப்படி களத்தில் இறங்கி எதையாவது செய்து விட்டு எது கடினம் என்று பேச சொல்லுங்கள் என்று அமைச்சர் ஆதவிற்கு விவசாயிகள் சவால் விடுத்தனர்.

Tags : Madurai ,Tamil Nadu ,Thiruvallur ,
× RELATED சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்...