×

ஓமன் கப்பலில் உயிரிழந்த மாலுமி உடல் தூத்துக்குடி வந்தது

*உறவினர்கள் நண்பர்கள் அஞ்சலி

தூத்துக்குடி : ஓமன் நாட்டில் உயிரிழந்த கப்பல் மாலுமி உடல் தூத்துக்குடி வந்தடைந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கப்பல் மாலுமி நிஷாந்த்.

இவர், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். கடலில் பணியில் இருந்த போது திடீரென இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கப்பலிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து நிஷாந்துடன் பணியாற்றிய சக ஊழியர்கள், சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டனர். அதில் உயிரிழந்த நிஷாந்தின் உடலை கப்பல் நிறுவனம் முறையாக குளிர்சாதன பெட்டியில் பராமரிக்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும் உடல் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்ந்த தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டும். கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து நிஷாந்தின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதனால் கப்பலில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிஷாந்தின் உடல் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்திய தூதரகம் மூலம் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, விமானம் மூலம் நிஷாந்தின் உடல் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து வேன் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் குரூஸ்புரம் பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர்.

நிஷாந்தின் உடல் கொண்டு வரப்பட்டதும், அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் நண்பர்கள், மாலுமிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் நிஷாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், லூர்தம்மாள்புரம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Oman ,Thoothukudi ,Nishanth ,Kuruspuram ,Omani ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...