நெமிலி : பயிர் கடன் முழுமையான தள்ளுபடி செய்யக்கோரி பட்டையிட்டு மண்பானை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பொதுச் செயலாளர் உதயக்குமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.
இதில் விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் நெமிலி பேருந்து நிலையத்தில் அனைவரும் நெத்தியில் பட்டை போட்டுக்கொண்டு மண் பானை ஏந்தி ஊர்வலமாக வந்து நெமிலி தாலுகா அலுவலகம் வரை தமிழக அரசு விவசாயிகளின் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்துடன் வந்து தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதன்பின் விவசாயிகள் பேசியதாவது:தமிழகத்தில் ஆட்சி அமைந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் நேரத்தில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என பொய் பிரசாரம் செய்து ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளை ஏமாற்று வேலையாக தள்ளுபடி குளறுபடி செய்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அதனை உடனடியாக செய்யவில்லை என்றால் நாடு முழுவதும் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி தமிழக முழுவதும் உள்ள விவசாயிகள் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பெற்ற விவசாயம் சார்ந்த கால்நடை இயந்திரங்கள் போன்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும், தெரிவித்துள்ளனர்.
