*முறைப்படுத்த பொது மக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலை ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில் மார்க்கெட் ரோடு, தெப்பக்குளம் வீதி, ராஜா மில் ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, உடுமலை ரோடு தேர்நிலை பகுதி, பஸ் நிலையம் அருகே பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது.
அதிகாலை முதல் இரவு வரை, இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அதிகமாக சென்று வருகிறது. அதுபோல, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளாக கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலை ரோடுகள் உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் ரோட்டை மறைத்தவாறு பகல் நேரத்தில் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்வதால், ரோட்டில் செல்லும் பிற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் உள்ளது.
இதில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு மற்றும் உடுமலை ரோட்டோரம் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் ரோட்டை மறித்ததுபோல தாறுமாறாக நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்படுவது மட்டுமின்றி, சில நேரங்களில் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அந்த வழியாக வரும் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரத்தில், அதிவேகமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனம், அப்பகுதியில் வேகத்தடைபோல வேகத்தை குறைத்து செல்ல வேண்டிய சூல்நிலை ஏற்படுகிறது.
இந்நிலை நீடித்தால், வருங்காலங்களில், நகரில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலை பகுதி வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படும் பகுதியாக மாறி விடும். எனவே, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோட்டை மறித்தவாறு வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்துசெல்லும் முக்கிய ரோடுகளான கோவை ரோடு, பாலக்காடு ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க, கடந்த சில ஆண்டுக்கு முன்பு, கயிறு கட்டி கோடிட்டனர். இருப்பினும் அந்த செயல்பாடு குறிப்பிட்ட மாதங்களே இருந்ததுடன், அதன்பின் வாகன விதிமுறை மீறல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்ந்தது.
விதிமுறை மீறி போக்குவரத்து மிகுந்த ரோட்டோரம் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்வதை தடுக்கும் விதமான பணியை முறையாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது.
ரோட்டோரம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என போலீசார் வரைமுறைப்படுத்தி சென்றாலும், அதனை முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து விதிமுறை மீறல் சம்பவத்தை தடுக்க, பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
