புதுடெல்லி: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ போலியானது என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மே 3ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்கவும், நேர்மையான முறையில் தேர்வை நடத்தவும் ஒன்றிய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒட்டுமொத்த தேர்வு சுழற்சியையும் 37 நாட்களில் முடித்து, வழக்கத்தை விட வேகமாக தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், டெலிகிராம் செயலியில் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாகப் பரவும் வீடியோ முற்றிலும் போலியானது என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல் அபிஷேக் சிங் கூறுகையில், ‘நீட் மறுதேர்வு எவ்வித புகார்களும் இன்றி முழு பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை; இதில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றும் நோக்கில் வதந்திகளைப் பரப்புவோர் மீது ஐ4சி மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இது குறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழுவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பொய்யானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
