×

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று வார விடுமுறை நாளையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் புனிநீராடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று வார விடுமுறை நாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிய தொடங்கினர். இதையடுத்து அவர்கள் திரிவேணி சங்கமத்தில் நின்றவாறு கடலில் இருந்து உதித்து வந்த சூரியனை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். பின்னர் காலை 8 மணி அளவில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் படகு சேவை தொடங்கியது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று கடலில் படகில் சென்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரியின் இன்று காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகமானதால் குளிர்பானம் மற்றும் சர்பத் கடைகளில் விற்பனை அதிகரித்தது.

Tags : Kanyakumari ,
× RELATED பெரியபாளையம் அருகே அமோனியா வாயு...