அம்மா உணவகத்தில் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியாமல் பணியாளர்கள் திணறல்

 

திருப்பூர்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அம்மா உணவகத்தில் பழுதடைந்த ஸ்டீம் அடுப்புகளால் பணியாளர்கள் திணறி வருகின்றனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் மூலம் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என பலரும் குறைந்த விலையில் உணவருந்தி வருகின்றனர். 2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும்,2021 திமுக ஆட்சி அமைந்த போதும் மக்களின் தேவைகள் உணர்ந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. மேலும், அம்மா உணவகங்களில் உணவு சமைப்பதை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் கேஸ் அடுப்புகளுக்கு மாற்றாக ஸ்டீம் அடுப்புகள் மாற்றப்பட்டது.

ஆனால், அவை தற்போது பழுதாகிய நிலையில் உணவு சமைப்பதற்கான செலவு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டீம் அடுப்புகள் பயன்பாட்டில் இருந்த போது காலை இட்லி, சாம்பார், மதியம் சாதம், குழம்பு, ரசம் ஆகியவை விரைவாக உரிய நேரத்தில் சமைக்க முடிந்தது. ஆனால், தற்போது ஒரே ஒரு சிலிண்டரை கொண்டு அனைத்தையும் செய்வது நேர விரயத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர். தற்போது நிலவி வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உணவகத்திற்கு ஒதுக்கப்படும் வழக்கமான பட்ஜெட்டை தாண்டி அதிகரிக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், பழுதான ஸ்டீம் அடுப்புகளை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கடந்த ஆட்சி காலத்தில் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தறபோது முறையாக கிடைப்பதில்லை, அம்மா உணவகங்கள் முன்பை விட சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என அரசு பொறுப்பேற்ற பின் உறுதியளிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு ரீல்ஸ் வெளியிட்ட நிலையில் இதுபோன்ற குளறுபடிகளையும், குறைகளையும் கண்டும் காணாமல் இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: