புதுடெல்லி: கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை நீட் நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி (நாளை) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவை தடுக்கும் ஒரு பகுதியாக, நீட் மறுதேர்வு முடியும் வரையில் அதாவது ஜூன் 22ம் தேதி வரையில் டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த நிறுவன தொடர்ந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”வினாத்தாள் கசிவை தடுக்கும் ஒரு பகுதியாக நீட் மறுதேர்வு முடியும்வரை டெலிகிராம் செயலிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000பிரிவு 69ஏயின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேப்போன்று டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி புதிய டார்க் வெப் ஆகவே தற்போது மாறியுள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து டெலிகிராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவிற்காக முழு தளத்தையும் பொறுப்பாக்குவது என்பது பொருத்தமற்றதாகும். இதுபோன்ற நடவடிக்கை 15 கோடி இந்தியர்களின் உரிமையை பாதிக்கிறது. எனவே ஒன்றிய அரசின் தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ”வினாத்தாள் கசிவுகளை எதிர்த்து போராடுவதற்கு, அதன் கட்டமைப்பு குறைந்த கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கிறதா என்று கேள்வியழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நேற்று முன்தினம் ஒத்திவைத்திருந்தார்.
மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் காரியா நேற்று வழங்கிய தீர்ப்பில், ”டெலிகிராம் செயலி தடை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் மிக குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே கொண்டுள்ளது. அதனால் எந்தவித பாதிப்பும் கிடையாது என்பதால் அது சரியான ஒன்றாகும். அதேப்போன்று ஒன்றிய அரசின் அந்த உத்தரவு என்பது விகிதாச்சாரத்தை மீறியது என்று கூற முடியாது. எனவே இவற்றை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தில் டெலிகிராம் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.
