தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லி தனியார் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்மா உணவுகளத்தில் உணவு வகைகள் பார்சல் வழங்க தடை விதித்ததார். மேலும், புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்திருந்தார்.
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ரூ. 1-க்கு வழங்கப்படும் இட்லிகளை மொத்தமாகப் பார்சல் செய்து, வெளி ஹோட்டல்களுக்கு ரூ. 5 முதல் ரூ.10 வரை லாபத்திற்கு ஊழியர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட கங்கா, சங்கரேஸ்வரி ஆகிய இரு ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அம்மா உணவக விதிகளின்படி அங்கு அமர்ந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதால், இனி யாருக்கும் எக்காரணம் கொண்டும் இட்லி பார்சல் வழங்கக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
