×

இறுதி முடிவை எடுக்க 60 நாட்கள் அவகாசம்; ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால் பதிலடி நிச்சயம்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

ெடஹ்ரான்: அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக, நேற்று இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இறுதி முடிவை எட்டுவதற்கு 60 நாள் அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஈரானின் அணுசக்தி பயன்பாடு மற்றும் ஏவுகணை திறன்களை கட்டுப்படுத்துவது குறித்தும், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்தும் விரிவாக விவாதிக்க இரு தரப்பும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன.

தற்போது நடைபெற்று வரும் இந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி வழங்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக உள்ளோம்; ஆனால், அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளோ ஒப்பந்தத்தை மீறி கூடுதல் கோரிக்கைகளை முன்வைத்தால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். கடந்த கால போரின் போது வாங்கிய அடியை விட, இந்த முறை அவர்களுக்கு பலமான அடி விழும்’ என்று காரசாரமாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘ஈரான் உடனான 60 நாள் பேச்சுவார்த்தை காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது; இந்த ஒப்பந்தம் மூலம் ஈரானின் ஏவுகணை தாக்குதல் திறன்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். புள்ளி விவரங்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரே இரவில் 125 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக அதிக அளவாகும். இதன் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் தடுக்க மாட்டோம்;
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கடல்வழி முற்றுகைகளையும், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) நீக்கியுள்ளது. இதுகுறித்து சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இனிமேல் தடுக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IRAN ,Tehran ,United States ,
× RELATED ஈரான் உடனான ஒப்பந்தத்தை விமர்சிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பதிலடி!