வேலூர்: காட்பாடி பிரம்மபுரம்-ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.100கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முழுமை பெற்று இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நேற்று மாலை பாலத்தை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் பாலத்தை பெரும் முயற்சி எடுத்து ரூ.100 கோடியில் அமைத்தேன்.
பெற்ற மகளை போல் இந்த சாலையை பார்த்து அனுபவித்தேன். நான் அமைத்த சாலையை பார்ப்பதற்காக வந்தேன். தமிழுக்கு தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த ஊர் காங்கேயநல்லூர். அந்த மகானின் பெயரை இந்த சாலைக்கு சூட்டவேண்டும் என்பது எனது ஆசை. நிதி அமைச்சர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. 50 ஆண்டு காலம் சட்டசபையில் இருந்தும் கூட சில நேரங்களில் சிலது புரியாமல் போய்விடும். இப்போது உள்ளவர்கள் புதியவர்கள், நிதி செயலாளர் சொல்வதுதான் சரியாக இருக்குமே தவிர நிதி அமைச்சர் சொல்வது சரியாக இருக்காது.
தமிழக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை கிடையாது, அது கருப்பு அறிக்கை. தவெக ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்பது ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. அதை சொல்ல நான் ஜோசியக்காரன் அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் வன்முறை, கொலை, பாலியல் தொல்லை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை அறியும்போது மனசு வெதும்பி போகிறது. இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சூட் பண்ண வேண்டும். எம்ஜிஆர் கட்சிக்கே எங்கள் கட்சியில் இருந்துதான் தாவினார்கள். இன்றைக்கு இன்னொரு கட்சிக்கு தாவுகிறார்கள். அது அவர்கள் கட்சி விவகாரம்.
மேகதாது விவகாரத்தில் தற்போதைய அரசுதான் தீவிரம் காட்டவேண்டும். மேகதாதுவில் அணை கட்டவே முடியாது. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். தீர்ப்பை ஒழுங்காக அவர்கள் படிக்க வேண்டும். தீர்ப்பை படித்தால் எல்லாம் தெரியும். சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று உள்ளது. அதோட ஆணையை யாரும் மீற முடியாது. எந்த மாநிலமும் மீற முடியாது. இவ்வாறு கூறினார்.
