சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு பிரச்சனையால் அவதிப்படும் மக்களின் தலையில் இடியை இறக்குவது போல் விரைவில் மின்கட்டணத்தை உயர்த்த தவெக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் முதல்வர் பரிசீலிப்பார் என்று அமைச்சர் பூடகமாக பேசியது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மாற்று அரசியலை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் அரியணை ஏறியது. ஆனால், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, கோடைக்கால வெயிலின் கொடுமைக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் ‘‘மின்வெட்டுப் பிரச்சனை” மிக மோசமாகத் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மின்கட்டமைப்பைச் சீரமைக்காமல், வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவது சாமானிய மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவிலும், பகல் நேரங்களிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் முழுவதும் பொதுமக்கள் தங்களின் குமுறல்களைப் பதிவிட்டு, அரசுக்கு எதிராகப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டுப் பிரச்சனைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளோ அல்லது முறையான பராமரிப்பின்மையோ தான் காரணம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் ‘‘திமுக ஆட்சியில் விட்டுச் சென்ற அரைகுறை திட்டங்கள்” என்றும், ‘‘சதிச் செயல்களால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது” என்றும் கூறி பழியை மற்றவர்கள் மீது போடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். நிர்வாக குளறுபடிகளை தன்முனைப்போடு சரிசெய்யாமல், முந்தைய ஆட்சியின் மீது குற்றச்சாட்டை சுமத்தி தப்பிக்க முயல்வது ஒரு புதிய அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. அதேபோல், தேர்தல் பிரச்சாரங்களின் போது, ‘‘மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்” வழங்கப்படும் என்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான வாக்குறுதியை அளித்திருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மட்டுமே இலவசம் என அரசாணை வெளியிட்டு, அதில் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். வாக்குறுதி அளித்தபடி முழுமையான இலவச மின்சாரத்தை வழங்காத நிலையில், தற்போது மின்கட்டணத்தை மேலும் உயர்த்த திட்டமிடுவது மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிலவி வரும் மின் தட்டுப்பாடு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாகத் தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விசைத்தறிகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. உற்பத்தி முடங்கி, தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், புதிய மின்கட்டண உயர்வு வணிகர்களின் தலையில் இடியாய் இறங்கப் போகிறது. உற்பத்திச் செலவு அதிகரித்தால், அது இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுத்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நிலை உண்டாகும்.
மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த அரசின் ஒப்பந்தத்தால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் கட்டணத்தை தன்னிச்சையாக அறிவித்து உயர்த்தி வருகிறது. இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பரிசீலித்து முடிவை எடுப்பார். மின் கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில் அதனை அரசே ஏற்குமா என்பதை நிதி துறையினரின் ஆலோசனை பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
