குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது தொடர்பாக தினமும் கண்டிப்பாக 10 வழக்குகள் பதிய வேண்டும்: உயரதிகாரி வாய்மொழி உத்தரவால் போலீசார் கடும் மன உளைச்சல் டி.டி. கருவியுடன் சாலையில் அலையும் அவலம்

 

 

தண்டையார்பேட்டை: போக்குவரத்து போலீசாரின் முதன்மை கடமை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதை முறைப்படுத்துவதுமாகும். மேலும், சிக்னலை சரி பார்ப்பது, ஹெல்மெட் அணியாமலும், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமலும் செல்பவர்கள், வேகமாக வண்டியை ஓட்டி செல்பவர்கள், ரேஸ் ஓட்டுபவர்கள் போன்றோர்களை பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடக்க உதவி செய்வதும் அடங்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை முழுவதும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் போலீசாருக்கு உயரதிகாரிகளால் ஒரு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தினமும் 10 வழக்குகளாவது பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். ஒரு நபருக்கு ரூ.10 ஆயிரம் என்றால் 10 வழக்கு பதிவு செய்யப்படும்போது ரூ.1 லட்சம் வசூலாகிறது. இதேபோன்று சென்னை முழுவதும் வசூலிக்கப்பட்டால் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்பதுதான் இந்த உத்தரவின் நோக்கமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

எதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என விசாரித்தபோது, தற்போது தமிழக அரசின் உத்தரவுபடி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈடுகட்டும் விதமாகத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் வடசென்னையை பொருத்தவரை நடுத்தர மக்கள், ஏழை மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், கொருக்குப்பேட்டை, மண்ணடி, முத்தியால்பேட்டை, யானை கவுனி, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தணிக்கை செய்து அபராத தொகையை கட்ட முடியாதவர்களை இருசக்கர வாகனத்தை அடாவடியாக பறிமுதல் செய்கின்றனர். இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல வாகனம் இல்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள். அதே நேரத்தில் உயரதிகாரியின் இந்த நடவடிக்கை போலீசாருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதாவது, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், 24 மணி நேரமும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக டி.டி. கருவியை கையில் வைத்து கொண்டு சாலையில் அலைகிறார்கள். சில நேரங்களில், பரிசோதனை செய்யும்போது வேகமாக வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இதற்கு, ‘நீங்கள்தான் காரணம்’ என போலீசார் மீது பழிபோட்டு உயரதிகாரிகளால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், ‘சிலர் போதையில் போலீசார் மீது வாகனத்தை இடித்து விட்டு தப்பி செல்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது போலீசார்தான். இதை உயரதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என போலீசார் குமுறுகின்றனர். மன உளைச்சலில் நொந்து கொள்கிறார்கள். உடனடியாக உயரதிகாரிகள், இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையென்றால் போலீசார் விபரீத முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒருபுறம் அரசே மதுபானத்தை விற்பனை செய்துவிட்டு மறுபுறம் குடித்து விட்டு வருபவர்களை பிடிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் தமிழக அரசு மீது பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. போலீசாரும் விரக்தியில் உள்ளனர்.

 

Related Stories: