சென்னை: மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம், உப்பரபலம் பகுதியை சேர்ந்தவர் பாலபத்ராஜ் (28). இவர் தனது குடும்பத்துடன் சாய்பாபா படம் கொண்ட சிறிய வாகனம் மூலம் சென்னை முழுவதும் சுற்றிவிட்டு பிறகு இரவு மெரினா கடற்கரையில் தங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை மெரினா கடற்கரைக்கு தனது 2 வயது மகளுடன் வந்து தங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, திடீரென இவரின் 2 வயது மகள் மாயமானார். பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலபத்ராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். மெரினா மற்றும் மயிலாப்பூர் காவல் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் மெரினா கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல இடங்களில் தேடிவிட்டு, கடைசியாக கலங்கரை விளக்கம் பின்புறம் 2 வயது சிறுமி அழுதபடி தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்திய போது, மாயமான பாலபத்ராஜ் மகள் என தெரியவந்தது.
அதைதொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மெரினா போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் பாலபத்ராஜை அழைத்து அவரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும், விரைந்து ெசயல்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு மாயமான குழந்தையின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
