பாங்காக்:அமெரிக்க குடியுரிமை பெற்றவரான மின் ஜின் என்பவர் மியான்மர் மற்றும் அமெரிக்க அரசியல் நிலவரங்கள் குறித்து ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உளவு பார்த்தல்,தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின் ஜின்னுக்கு அறிமுகமான நபர் கூறுகையில் கடந்த 3ம் தேதி சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம், குன்மிங் நகருக்கு சென்ற மின் ஜின் அதன் பிறகு காணவில்லை என்றார். உளவு பார்த்தல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மின் ஜின் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சீன வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். அமெரிக்க மற்றும் மியான்மர் ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளையும் கொண்ட இந்த ஆய்வாளர் மியான்மர்,சீனாவின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து எழுதி வந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை புதுப்பிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் கடந்த மாதம் சீனாவுக்கு சென்று வந்தார். அதன் பிறகு இந்த கைது நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. மின் ஜின் கைது குறித்து அமெரிக்க தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைதானவருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
