ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 13: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்தில் வேளாண் துறை சார்பாக ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் ராஜா பேசுகையில், பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல், மண் பரிசோதனையின் அடிப்படையில் உர மேலாண்மை மேற்கொள்ளுதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் ராஜேந்திரன் உயிர் உரங்களின் பயன்பாடு, நுண்ணாட்ட உரங்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) தினேஷ்குமார் ஊட்டமேற்றிய தொழு உரம் குறித்த செயல் விளக்க பயிற்சியினை அளித்தார். இம்முகாமினை ஆட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ஆனந்த் மற்றும் முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் ஓடைக்கால் கிராம விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
