மேட்டுப்பாளையம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் அண்மையில் துவங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை எஸ்பி பவன்குமார் தலைமையில், கோவை மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்ஐ ரோசினா பானு தலைமையிலான குழுவினர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணைய வழி மோசடிகள், சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பான பயன்பாடு, அவசர கால உதவி எண்கள்(1098), காவல் துறையின் பாதுகாப்பு சேவைகள் குறித்து விளக்கினர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக எவ்வித தயக்கமும் இன்றி காவல்துறையை அணுக வேண்டும். காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல் சிறுமுகை தியேட்டர் மேடு, சந்தை கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் பள்ளி மாணவர்கள் பெண்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
