×

தகாத உறவை எதிர்த்த விவசாயி இரும்பு கம்பியால் அடித்து கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

 

திருமலை: கள்ளக்காதலை எதிர்த்த விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் காமரேட்டி மாவட்டம் மார்க்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜய்யா (45), விவசாயி. இவரது மனைவி ரேணுகா (35). குழந்தை இல்லை. ராஜய்யா சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக காப்பீடு எடுத்திருந்தார். கடந்த மாதம் 22ம் தேதி தம்பதியினர் தங்கள் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்ட மாலை பைக்கில் வீடு திரும்பினர். அப்போது அவ்வழியாக நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது இவர்களது பைக் மோதி இருவரும் சாலையில் விழுந்ததாகவும் இதில் ராஜய்யா இறந்துவிட்டதாகவும் போலீசில் ரேணுகா புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜய்யா அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேணுகாவிடம் சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேணுகாவுக்கும் அதேபகுதியை சேர்ந்த கங்கசேகர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த ராஜய்யா மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரேணுகா, தங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொன்றுவிட்டு அவரது இன்சூரன்ஸ் பணத்தை அபகரிக்க திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று ராஜய்யாவை சந்தித்த கங்கசேகர், அதிக மது கொடுத்துள்ளார். போதையில் மயங்கி விழுந்த அவரை இரும்பு கம்பியால் கங்கசேகர் சரமாரி தாக்கியுள்ளார். இதில் ராஜய்யா இறந்துவிட்டார். இந்த கொலையை மறைப்பதற்காக பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் தவறி விழுந்து இறந்துவிட்டார் என ரேணுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார் என தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகா மற்றும் அவரது கள்ளக்காதலன் கங்கசேகரை நேற்று கைது செய்தனர்.

Tags : Tirumala ,Rajaiah ,Markal ,Kamareddy district of Telangana ,Renuka ,
× RELATED நடப்பாண்டு நீட் தேர்வு எழுத கூடுதலாக 15...