மதுரை, ஜூன் 11: மதுரையில் தவெக பிரமுகர் வைத்த பிளக்ஸ் பேனர்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டனர். தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக பிரமுகர் ஒருவர், மதுரை நேதாஜி ரோட்டில் நேற்று பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். இதற்காக நேதாஜி ரோட்டின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மதுரையின் முக்கிய வணிக பகுதியாக இருப்பது நேதாஜி ரோடு. இங்கு காலை முதல் இரவு வரை பொதுமக்கள் வருகை அதிகம் இருக்கும். இந்நிலையில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் முன்பகுதியை மறைக்கும் வகையில், அதிக எண்ணிக்கையில் தவெக பிரமுகர் பிளக்ஸ் பேனர்களை அமைத்திருந்தார். இதேபோல் சாலையின் நடுவில் உள்ள இரும்பு தடுப்புகளில், பெரிய அளவிலான கட்சி ெகாடிகள் கட்டப்பட்டிருந்தன.
இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டனர். இதேபோல் வழக்கமாக இருவழிச்சாலையான நேதாஜி ரோடு பகுதியை, பிரியாணி வழங்கும் நிகழ்ச்சிக்காக போலீசார் நேற்று ஒரு வழிப்பாதையாக மாற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பிரியாணி வாங்குவதற்கு ஏராளமானோர் கூடியதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இந்த சாலையில் உள்ள கடைகளின் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
