- எங்களுக்கு
- ஹோர்முஸ் நீரிணை
- இஸ்ரேல்-ஈரான்
- டிரம்ப்
- துபாய்
- ஜனாதிபதி
- ஹார்முஸ் ஜலசந்தி
- ஐக்கிய
- மாநிலங்களில்
- ஈரான்
துபாய்: இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகவும் அதிலிருந்த 2 விமானிகள் பத்திரமாக தப்பியதாகவும் அதிபர் டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, இருதரப்பிலும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை ஏவி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரானின் பெட்ரோகெமிக்கல் ஆலை சேதமடைந்தது. ஏப்ரல் 8க்கு பிறகு முதல் முறையாக நடந்த மோதல் மீண்டும் மத்திய கிழக்கில் முழு அளவிலான போரை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது.
ஆனாலும் சில மணி நேர தாக்குதலுக்குப் பிறகு ஈரானும், இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாகவும் எதிர்கால அத்துமீறல்களுக்கு வலுவான பதிலடி தரப்படும் என இருதரப்பும் மிரட்டல்கள் விடுத்தன. இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இது குறித்து பதிலளிக்குமாறு அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவோ, பாதுகாப்பு துறையோ உடனடியாக பதிலளிக்கவில்லை. இது குறித்து, நியூயார்க்கில் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் இரவு பேசிய அதிபர் டிரம்ப் இந்த விபத்தை உறுதிபடுத்தினார்.
அவர், ‘‘விமானிகள் இருவரும் நலமாக உள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நாளை அறிக்கை வெளியிட உள்ளோம்’’ என்றார். இதே சமயத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் நோக்கி 21 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் கப்பல் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
* 2 ஈரான் வீரர்கள் பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வான் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் மீது எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையிலும் இஸ்ரேல் ஈடுபடக் கூடாது என ஈரான் எச்சரித்தும், அதிபர் டிரம்ப் கண்டித்தும் அடங்காத இஸ்ரேல், லெபனானின் தெற்கு துறைமுக நகரமான டயரில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு நேற்று எச்சரித்து விடுத்துள்ளது. அங்கு ஊடுவியதாக கருதப்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை வேட்டையாட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
