இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, கோதுமை விலை உயர்வு, அரசு மற்றும் அரசியலில் பிரதிநிதித்துவம் கோரி கடந்த பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய மக்கள் பிரச்னையை முன்வைத்து ஜாயின்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஜேஏஏசி) என்ற அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. இதற்கிடையே, அடுத்த மாதம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 12 இடங்களை அகதிகளுக்கு இடஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தான் அரசு தங்களுக்கு சாதகமான வெளிநபர்களை கொண்டு வந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் தன்வசப்படுத்த முயற்சிப்பதாக ஜேஏஏசி அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 5ம் தேதியிலிருந்து ரவாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதனால், ஜேஏஏசி அமைப்பு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜேஏஏசி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கடந்த 7ம் தேதி அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்கள் ரவாலாகோட் மருத்துவமனை முன்பாக குவிந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களாலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் கொரில்லா தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போலீசார் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த வன்முறையில் 4 பாதுகாப்பு படையினர் பலியான நிலையில், போராட்டக்காரர்களை விரட்டி பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, முசாபராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்த வன்முறையில் 4 பாதுகாப்பு படையினரும், போராட்டக்காரர்கள் 6 பேர் மட்டுமே பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலி எண்ணிக்கை 30ஐ தாண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் போராட்டம் நடப்பதால் முசாபராபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் போராட்டம்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் அராஜகங்களை கண்டித்து இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீரி வம்சாவளிகள் அங்கு பாகிஸ்தான் தூதரம் முன்பாக போராட்டங்களை நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க இங்கிலாந்து அரசு தலையிட்டு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அந்நாட்டின் 30 எம்பிக்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தை பாகிஸ்தான் எப்போது தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதாமல் உள்நாட்டில் உள்ள விரோதிகளாக நடத்துவதாக காஷ்மீரி வம்சவாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
* பாக்.கை பொறுப்பேற்க இந்தியா வலியுறுத்தல்
டெல்லியில் ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தச் சூழலில், பாகிஸ்தானிலிருந்து போலியான செய்திகளும் காணொளிகளும் பரப்பப்படும் போக்கை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இது பாகிஸ்தான் தனது தோல்விகளை மறைக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் தீவிர முயற்சிகளாகும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடுமையான காவல் துறை அத்துமீறல்கள் மற்றும் வன்முறை நடந்ததாகவும், அதில் பல போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தானின் தவறான செயல்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு சர்வதேச சமூகம் அந்நாட்டைப் பொறுப்புக்கூறச் செய்யும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
