முதல்வர் சொன்னதற்கு மாறான நிலைமையே உள்ளது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்

மதுரை: முதல்வர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவதாக கூறுகிறார். ஆனால், நிலைமையோ அதற்கு மாறாக உள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் இருந்தது. இதனிடையே திடீரென அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்து எனது தாயாருக்கு கடந்த மாதம் ஒரு அழைப்பு வந்தது.

அதில், பேசிய ஒருவர், நான் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நான் விசாரணைக்கு நேரில் வர வேண்டுமென்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நான் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றேன். அங்கு, நான் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக எனக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது;

எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்று போலீசார், பெண்ணின் குடும்பத்தினர் வற்புறுத்தினர். பின்னர், அருகில் உள்ள கோயிலில் நான் அந்த பெண்ணிற்கு தாலி கட்டுவது போல் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதில் எனக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. ஆனால், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருகின்றனர். எனவே, போலீசார் என்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம்பெண்ணின் மருத்துவ அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதைப் பார்த்ததும் கோபமடைந்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலன் குறித்து முழுமையாக பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான அறிக்கை அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், நீதிமன்றத்திற்கு கொடுத்த விபரத்தில், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். உடல்நலன் குறித்த அறிக்கை கேட்டதற்கு, கருக்கலைப்பு செய்வது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? அரசு பொதுத்துறையின் உயர் பொறுப்பில் இருக்கும் மருத்துவக்கல்லூரியின் டீன், ஐகோர்ட்டிற்கு இப்படி அறிக்கை தாக்கல் செய்வது என்பது இந்த நீதிமன்றத்திற்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக இளம்பெண் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின் டீன், இந்த நீதிமன்றத்தில் நேரில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, தற்போதைய தமிழ்நாடு முதல்வர் பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் எனக் கூறுகிறார். ஆனால் நடக்கும் நிலைமையோ அதற்கு மாறாக உள்ளது என கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

* உடல்நலன் குறித்த அறிக்கை கேட்டதற்கு, கருக்கலைப்பு செய்வது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்?

* அரசு பொதுத்துறையின் உயர் பொறுப்பில் இருக்கும் மருத்துவக்கல்லூரியின் டீன், ஐகோர்ட்டிற்கு இப்படி அறிக்கை தாக்கல் செய்வது என்பது இந்த நீதிமன்றத்திற்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

* தற்போதைய தமிழ்நாடு முதல்வர் பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் எனக் கூறுகிறார். ஆனால் நடக்கும் நிலைமையோ அதற்கு மாறாக உள்ளது.

Related Stories: