நெல் கொள்முதல் பணம் வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்: மதுரை அருகே போக்குவரத்து பாதிப்பு

 

மதுரை: நெல்கொள்முதல் செய்த பணத்தை வழங்கக்கோரி, மதுரை அருகே கள்ளந்திரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி, சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக பாரப்பட்டி, காஞ்சரம்பேட்டை, வெளிச்சநத்தம், மாலைப்பட்டி, கள்ளந்திரி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட நிலையங்களில் தனியார் அமைப்பு (என்சிசிஎப்) சார்பில் கொள்முதல் செய்த நெல்லுக்கு கடந்த 4 மாதமாக பணம் வழங்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

பணத்தை வழங்க கோரி விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை கள்ளந்திரியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நெல்கொள்முதலுக்கான பணத்தை வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் மதுரை-அழகர்கோவில் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நெல் கொள்முதலுக்கான பணத்தை வழங்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 4 மாதத்திற்கு மேலாகியும் பணம் வழங்காததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம். பணத்தை உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 12ம் தேதி காஞ்சரம்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர்.

Related Stories: