மதுரை: மதுரை யானைமலை சமணர் மலைப்பகுதியை தொல்லியல் துறையினர் பூட்டி வைத்திருப்பதால் புராதன சின்னங்களை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள், தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மதுரை ஒத்தக்கடை அருகே பழமையான யானைமலை உள்ளது. இங்கு 2,300 ஆண்டுகள் பழமையான பிராமிக் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் இந்த மலை ‘யுவ’ குன்றம் என அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பழமையான காலம் முதல் இந்த மலைப்பகுதி யானைமலை அறியப்படுகிறது.
இங்குள்ள யோக நரசிம்மர் ஆலயம் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இம்மலைப்பகுதியில் உள்ள லாடன்கோயில், சமணர் சிற்பங்கள், பிராமிக் கல்வெட்டுகள் என முப்பெரும் பகுதிகளையும் தொல்லியல் துறை கடந்த 1993ல் புராதனச் சின்னமாக அறிவித்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாண்டிய மன்னர்கள் இம்மலையை குடைந்த கதையை இங்குள்ள கல்வெட்டு காட்டுகிறது. இங்கு 8ம் நூற்றாண்டில் உருவான லாடன்கோயில் என்னும் முருகன் குகைக்கோயில் அழகாக ஜொலிக்கிறது.
கருவறைக்குள் முருகன் வள்ளியுடன் அமர்ந்திருக்க, புடைப்புச் சிற்பங்களாக மயில், சேவல் வடிவங்களும் உள்ளன. இம்மலையின் வலதுபுற பக்கவாட்டில் கிபி 9-10ம் நூற்றாண்டின் சமணர் படுகைகள், சிற்பங்கள் என புராதன பொக்கிஷங்கள் இருக்கினறன. அச்சநந்தி என்ற சமணத்துறவியின் முயற்சியால், அக்காலத்திலேயே உளி, கடப்பாரை இன்றி இச்சிற்பங்கள் பாறையில் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் கீழ் தமிழ், கிரந்தம், வட்டெழுத்துகளில் கல்வெட்டுகள் உள்ளன. இயற்கை வண்ண ஓவியங்களும் உள்ளன.
இந்த நிலையில், சமணர் சிற்ப மலைப்பகுதிக்கு செல்லும் இடத்தை தொல்லியல்துறை, இரும்பு வேலிக் கதவுகள் அமைத்து பூட்டு போட்டு மூடி வைத்துள்ளனர். சமூக விரோதிகள் இப்பகுதியில் வந்து, மது குடித்து பாட்டிலை உடைத்துச் செல்வதால், பாதுகாப்பு கருதியும் இந்த பகுதியை பூட்டி வைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து பழமை மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ‘வரலாற்றுப் பெருமைக்குரிய மதுரையின் அடையாளமாக யானைமலையில் சமணர் சிற்ப மலைப்பகுதி இருக்கிறது.
இங்கு செல்வதற்கான நுழைவிடப்பகுதியை பூட்டி வைத்திருப்பதால், கோயிலை மட்டுமே தரிசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். தொல்லியல் துறை பாதுகாப்பு காவலர்களை நியமித்து, எல்லா காலமும் பாரம்பரிய பகுதியை பார்வையிட வசதியாக திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் சிறப்பு நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.
