×

உல்லாசம் அனுபவிக்க போதை ஊசி செலுத்தப்பட்ட இளம்பெண் திடீர் சாவு: காதலன், நண்பன் கைது

 

திருச்சி: திருச்சியில் போதை ஊசி செலுத்தப்பட்ட இளம்பெண் இறந்தது தொடர்பாக அவரது காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் மில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் சதாம் உசேன்(19). இவர் அரியமங்கலம் மலையடிவாரம் தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த அப்துல் ஆசாத் மகள் யாஸ்மினை(18) காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களில் சுற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் ஒரு லாட்ஜில் தம்பதி என கூறி அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில், நேற்று யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி, சதாம் உசேன் தனது நண்பர் அரியமங்கலத்தை சேர்ந்த ஷேக்அப்துல்லா(19) உதவியுடன் யாஸ்மினை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு யாஸ்மினை பரிசோதித்த டாக்டர்கள் அவரது நிலைமை மோசமாக இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் யாஸ்மின் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் யாஸ்மின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன் யாஸ்மின் சிறுமியாக இருந்த போது சதாம் உசேன்(சிறுவனாக இருந்தபோது) பாலியல் தொல்லை கொடுத்ததாக பொன்மலை போலீசில் தாயுடன் சென்று யாஸ்மின் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சதாம் உசேனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் வெளியே வந்ததும் மீண்டும் யாஸ்மினை சந்தித்தார். அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர்.

ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் திருச்சி வந்த அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தும், பின்னர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியதும் தெரியவந்தது. நேற்று இருவரும் போதை மாத்திரை மற்றும் போதை ஊசியை பயன்படுத்தி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. யாஸ்மின் மதியம் பிரியாணி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு சில மணி நேரத்தில் வலிப்பு வந்து அவர் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்க்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் யாஸ்மினுக்கு போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியது தெரியவந்தது. மேலும் அறையிலிருந்த 10 போதை மாத்திரை கொண்ட 7 அட்டைகள், ஊசி, மாத்திரை கலக்கிய நிலையில் 2 டீ கப், சிகரெட் துண்டு 3, செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் லாட்ஜ் உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரித்தனர்.

மேலும் காதலன் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஷேக் அப்துல்லா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்து நண்பர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்றார்களா அல்லது அதிக போதை மருந்து செலுத்தியதால் இளம்பெண் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தாய் புகார்
யாஸ்மின் தாய் கன்டோன்மென்ட் போலீசில் நேற்றிரவு புகார் அளித்தார். அதில் எனது மகளை சதாம் உசேன் அடிக்கடி வெளியே அழைத்து செல்வார். அப்போது சதாம் உசேனை கண்டிப்பேன். இதனால் அவர் என்னை மிரட்டி வந்தார். கடந்த 7ம் தேதி காலை வீடுபுகுந்து மகளை கடத்தி சென்று விட்டார். நேற்று மகள் இறந்த தகவல் தெரிந்து அரசு மருத்துவமனைக்கு சென்றேன். எனவே சதாம் உசேன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Trichy ,Zakir Hussain ,Mill Street, Ariyamangalam, Trichy ,Saddam Hussain ,Ariyamangalam ,
× RELATED தமிழ்நாட்டில் நெல்லை, கோவை,...