வாஷிங்டன்: மீண்டும் போர் அபாயம் மூண்டுள்ள நிலையில், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளார். ஈரான் மீது மீண்டும் பெரியளவில் போர் தொடுத்தால், பிறகு அந்த போரில் தனித்து நிற்க நேரிடும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்குக் கடும் எச்சரிக்கையையும் டிரம்ப் விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இஸ்ரேலிய பிரதமருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரானுடனான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கினால், அந்த போரில் அந்நாடு தனியாகவே போராட வேண்டியிருக்கும் என்று பிரதமர் நெதன்யாகுவிடம் தான் எச்சரித்ததாக அதிபர் ட்ரம்ப் கூறி இருக்கிறார். அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடுபாதையில் இஸ்ரேல் போர் விமானங்கள் தயார் நிலையில் இருந்த கடைசி நேரத்தில், அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையால் தாக்குதல் முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒருஉரையில், ஈரான் மீதான தாக்குதல்களை “தற்காலிகமாக” நிறுத்துவதாக நெதன்யாகு கூறினார். ஆனால், மீண்டும் தாக்குதலை ஈரான் துவக்கினால், அப்போது இந்த முடிவு நிலையானதாக இருக்காது என்றும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் பேசி இருக்கிறார்.
