திருச்சி, ஜூன் 9: தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் உத்தரகாண்டில் கடந்த 4 நாட்கள் நடந்தது. சப்-ஜூனியர், கேடட் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் நடந்த இந்த போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் தமிழக அணி 13 தங்கம், 8 வெள்ளி 11 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 32 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர்கள் சக்திவேல் மற்றும் ஆனந்தகுமார் தலைமையில் 8 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாணவி மித்ரா கட்டா மற்றும் குமித்தே பிரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 2 தங்கப்பதக்கங்களை வென்றார். யஸ்வந்த் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்நிலையில் பதக்கங்களை வென்று விமானம் மூலம் திருச்சி திரும்பியவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
