மதுரை: மதுரையில் யூடியூபர் மாரிதாஸை, சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். மதுரையில் உள்ள சூரியா நகரைச் சேர்ந்தவர் மாரிதாஸ், பிரபல யூடியூபர். பாஜவின் தீவிர ஆதரவாளரான இவர், தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசையும், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை மாநகர சைபர் கிரைம் ேபாலீசார், அவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, சென்னையிலிருந்து இன்று காலை மதுரைக்கு வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார், மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து சூரியா நகரில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு சென்றனர். அங்கு மாரிதாஸை கைது செய்து காவல்துறை வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
