சென்னை: காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் தூக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த காலி பாட்டில்களை திரும்ப பெரும் பட்சத்தில் அந்த 10 ரூபாயை திருப்பி தரும் திட்டத்தை அமல்படுத்தும்படி சுற்றுசூழல், வன விலங்குக்குள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது; அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்; தமிழகத்தில் 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க இருப்பதாகவும், காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; காலி பாட்டில்களை திரும்ப பெரும் வகையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் போது அதை ரசீதில் குறிப்பிட வேண்டும் என்றும்,
10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது என்பது வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்து கொள்ள கூடாது என்றும் கருத்தை பதிவு செய்தார்கள். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர்; இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து காலி மதுபாட்டில்களை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மாற்றி அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னேற்றம் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
