ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், மலைப்பகுதியில் திடீர் அருவிகள் உருவாகி, வைர மாலை போல காண்போரை கவருகிறது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பகல் வேளைகளில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.
இந்த நிலையில், வானிலை மையம் அறிவித்தபடி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகளில் இருந்து வரும் நீர், ராக்காச்சி கோயில் பகுதியில் நீரோடையில் சங்கமிக்கின்றன. செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அருவிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த அருவில் வைர மாலை போல காண்போரை கவருகிறது.
