சென்னை: தமிழ்நாட்டில் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மராட்டிய அரசு ரூ.36,585 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ விஜய் அரசு ரூ.2044 கோடி மதிப்பிலான பயிர்க்கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது.
மராட்டியத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ. 36,585 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.2044 கோடிதான், இரு மாநில பயிர்க்கடன் தள்ளுபடிக்கு இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மராட்டிய உழவர்கள் அடைந்த பயனை, தமிழ்நாட்டு உழவர்கள் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத அளவிற்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.5 ஏக்கர் வரையில் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.50000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் அதனை தொடர்ந்து பல்வேறு விதிமுறையுடன் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மராட்டியத்தில் தற்போது நடந்த அமைச்சரவையில் அனைத்து விவசாயிகளுக்கு எந்த வித பாகுபாடு இல்லாமல் விவசாயிகளின் பயிர்கடனில் ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பல்வேறு பாகுபாட்டுடன் இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மராத்திய அரசால் எந்த வித பாகுபாடுமின்றி கடனை தள்ளுபடி செய்ய முடியும் போது, தமிழ்நாடு அரசால் ஏன் முடியவில்லை என்ற கேள்வியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பியுள்ளார்.
தமிழக ஆட்சியாளர்கள் நபார்டு வங்கி மீது பழி போடுவதற்கு பதில் விதிகளை பின்பற்றி பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தனது அறிக்கையின் வழியாக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விதிகள் தடை இல்லை.. மனம் இருந்தால் ஏதும் தடை இல்லை என்கிற கருத்தினை தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
