?ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் கூறியுள்ளனர். அப்படி இருந்தும் இந்த மனிதகுலம் திருந்தாதபோது, இந்த அறிவுரைகள் அவசியமா?
– பாரதி கண்ணன், திருப்பூர்.
துறவி ஒருவர் ஒரு ஊருக்குச் சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான்;
“சாமி எனக்கு ஒரு சந்தேகம். உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில்தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்…??’’ என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார்;
‘‘தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கேதான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரை விட்டுச் செல்லும் பொழுது, நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டிவை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்துவிடு என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.
மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுற்றி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவுக் குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி. தினமும் நீ சுத்தப்படுத்தினாலும். இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்…?? என்று கேட்டார். அதற்கு அவன்,
‘‘என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கறீங்க…?’’ திரும்பத் திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா…?’’ இதை கேட்ட துறவி அப்போது சொன்னார்;
“தம்பி.. அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத்தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழிப் படுத்தும் செயலை
பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.
இளைஞன் கேட்டான்… “சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன…?’’ அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்துவிட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்;
“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா…?’’
“ஆகாது சாமி…’’ என்றான். துறவி கூறினார்;
“உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்… என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்துவிடும். அன்று வரை மனிதனை நன்னெறிப் படுத்த வேண்டும்’’ என்றார்.
?ஏகாதசி கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?
– சு.ராம்பிரசாத், சென்னை.
விரதம் என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப்போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு. ராமன், அடைக்கலமானவர்களை காப்பாற்றுவதை தன்னுடைய விரதம் என்று குறிப்பிடுகின்றார். (ததாதி ஏ தத் விரதம் மம) எனவே பகவானை நினைப்பது, அடைய முயற்சிப்பது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி வழிபடுகின்ற முறைதான் விரதம். கடவுளைப் பற்றி நினைக்கின்ற பொழுது நமக்கு உணவு பற்றிய சிந்தனை வராது என்பதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கின்ற முறையை வைத்தார்கள். அதில் ஆரோக்கியத்தையும் இணைத்தார்கள். அதனால் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று உள்ளம் பலப்பட்டது. இரண்டு உணவு உண்ணாமல் ஒரு நாள் உபவாசம் இருந்ததால் உடலும் பலப்பட்டது. இதைவிட வேறு என்ன பயன் வேண்டும்!
?கம்பர் சடகோபர் அந்தாதி என்று ஒரு நூலை எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே? சடகோபர் யார்?
– வித்யா பாலாஜி, பாப்பாரப்பட்டி.
நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்று பெயர். கம்பராமாயணத்தை எழுதி அரங்கேற்றம் செய்ய முயன்ற போது, சில தடைகள் ஏற்பட்டன. அப்பொழுது
பகவானே,
‘‘நம்மைப் பாடினாய், சரி, நம் சடகோபனைப் பாடினாயா?’’ என்று கேட்க, சடகோபராகிய நம்மாழ்வார் மீது அற்புதமான அந்தாதி இயற்றினார். அதை இயற்றி அரங்கேற்றிய பிறகுதான் கம்பனுடைய ராமாயணம் தடையில்லாமல் அரங்கேறியது. நம்மாழ்வாரின் பெருமையையும், அவர் இயற்றிய திருவாய் மொழியின் பெருமையையும் சொல்லும் அதி அற்புதமான நூல் இது. தென் தமிழத்தில் சில ஆலயங்களில் சடகோபர் அந்தாதி சேவிக்கும் வழக்கம் உண்டு.
?பானைகளை வாங்கி அதனை வீட்டில் வைத்து உபயோகம் செய்யக்கூடாது என்கிறார்களே, ஏன்?
– விஜயதரன், கோவை.
இது முற்றிலும் தவறான கருத்து. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பொங்கல் வைப்பதற்காக புதிய பானைகளை வாங்க வேண்டும். பொங்கல் வைத்து வழிபாடு செய்து முடித்ததும் பானையை வீட்டில் வைத்து உபயோகிக்கத்தான் வேண்டும். வருடந்தோறும் புதுப்பானைகளை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டினையே நம் முன்னோர்கள் செய்து வைத்தார்கள். தீபாவளி நேரத்தில் கேதார கௌரி விரத நோன்பிற்காக மண்ணால் ஆன சட்டியையும் தை மாதத்தில் பானையையும் வாங்கி வைத்து உபயோகிப்பது என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஆகும். அதிலும் உங்கள் ஊரான கோவையில் கிடைக்கும் மண்பாண்டங்கள் மிகவும் தரமுள்ளதாக இருக்கும். கோவைக்கு வரும்போதெல்லாம் புதுப்புது மண்பாண்டங்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பானைகளை வாங்கி வீட்டில் வைத்து உபயோகம் செய்யக்கூடாது என்ற கருத்து முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்புறத்தில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இதனால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமா?
– சௌமியா, திருவானைக்காவல்.
நிச்சயமாக ஏற்படாது. விநாயகப் பெருமானின் பார்வை பட்டால் வரும் ஆபத்துகளும் நீங்கிவிடும்தானே. பிறகு ஏன் இந்த சந்தேகம்? இறைவன் இல்லாத இடம் ஏது? ஆண்டவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற கூற்றினை நம்பினால் இதுபோன்ற சந்தேகங்கள் மனதில் எழாது.
