சாவடிபாளையம்: ஈரோடு அருகே ஆட்கள் பற்றாக்குறையால் சர்க்கரை ஆலைகள் கரும்பு அறுவடை செய்யாததால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனியார் சர்க்கரை ஆலைகள் ஆட்களை நியமித்து கரும்பு அறுவடை செய்வது வழக்கம். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் வாகனங்களில் ஏற்றி செல்லும் கரும்புகளை ஆலைகளில் இறக்குவதில் இருக்கும் பிரச்னையாலும் கரும்பு அறுவடை பணிகள் சுணக்கமடைந்து உள்ளன.
இதனால் சாவடிபாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கணக்கான ஏக்கரில் கரும்புகள் அறுவடை செய்யப்படாமல் தேக்கமடைந்து உள்ளன. அடுத்த பருவத்திற்கான தண்ணீர் வரும் ஜூன் 16 திறக்கப்பட உள்ள நிலையில், இன்னும் கடந்த ஆண்டு கரும்பையே அறுவடை செய்யமுடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்த போதும், அது போதுமானதாக இல்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகமும், கரும்பு ஆலைகளும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
