சென்னை: துறைமுகம் பகுய்தி புகையுடன் கலந்து வந்த வாயுவால் பொதுமக்கள் அச்சமைடந்துள்ளனர். தலைமைச் செயலகத்தை சுற்றி புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் புகை மூட்டத்தால் சுவாசிக்க சிரமம், கண் எரிச்சல், இருமல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அரை மணி நேரமாக புகை மூட்டம் நீடித்ததால் தலைமைச் செயலகத்தில் மக்கள் அவதியடைந்தனர்.
தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம் ஏற்பட்ட விவகாரத்தில் தீ விபத்து ஏதும் இல்லை என சென்னை துறைமுகம் விளக்கமளித்துள்ளது. வெயில் காரணமாக துறைமுகம் அருகே கொட்டப்பட்டிருந்த கந்தகம் வேதிப்பொருளில் இருந்து வாயு வெளியேறியுள்ளதாக துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கந்தகம் ரசாயனம் தீப்பற்றுவதற்கு 200 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. கந்தகம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்களை கையாள விதிமுறைகள் இருக்கின்றன. விதிகளை முறையாக பின்பற்றாததே கந்தகத்தில் இருந்து புகை வெளியேறியதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேதிப்பொருளை கையாண்டதில் விதிமீறல்கள் இல்லை. வெயில் காரணமாக எதிர்பாராத விபத்து
ஏற்பட்டுவிட்டதாக தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன் கூறியுள்ளார். மேலும் கந்தக புகை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. மக்கள் அச்சப்படவேண்டாம் என அவர் கூறினார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சரவணகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
