×

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்: கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுக்கு கோரிக்கை

 

சென்னை: கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சுங்கச் சாவடிகளில் 10 கி.மீ., தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கோடை விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் 4ம் தேதிக்கு தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது.

வரும் வியாழக்கிழமை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், பள்ளிகளுக்கு செல்வதற்கு ஆயத்தமாகும் வகையில், குழந்தைகளுக்கு சீருடை தைப்பது, புத்தக பைகள், நோட்டுப் புத்தகங்கள் வாங்குவது உள்ளிட்ட பணி களில் பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றிருந்தவர்கள் மற்றும் கோடை விடுமுறையை சுற்றுலாத் தலங்களிலும் மகிழ்ச்சியாக கழிப்பதற்காக வெளியூர் சென்றிருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளனர்.

இதனால், கடந்த இரு நாட்களாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை, மதுரை, திருச்சி பேருந்து நிலையங்களில் சென்னை நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆக வந்தன. டிக்கெட் புக் செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இடம் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்து வருவதால், நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சுங்கச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வருவதால் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலையில் இரண்டு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தவாறு சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. அதேபோன்று, செங்கல்பட்டு பகுதியில் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருக்கின்றன. நெரிசல் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது, நெரிசல் ஏற்படுவதும் வழக்கமாக இருக்கிறது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவியும்போது தான் நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கார்கள் அதிக அளவில் நெரிசல்களை ஏற்படுத்துகின்றன. போதிய அளவில் அரசு பேருந்துகள் இல்லாதது, புக்கிங் அதிகரிப்பதால் இதுதான் சான்ஸ் என்று ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது இதெல்லாம் கார் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது.

கார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், நெரிசல் அதிகமாகி பேருந்துகளில் பயணிக்கும் சாமானிய மக்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்...