- பிரெஞ்சு துணை தூதரக கவ
- காரைக்கால், புதுச்சேரி புதுச்சேரி
- பிரஞ்சு துணை தூதரக கவு
- புதுச்சேரி, காரைக்கால்
- பிரெஞ்சுக்காரர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிரெஞ்சு துணை தூதரக கவுன்சிலர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று பிரரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளித்தனர். வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு குடிமக்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்தது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இத்தேர்தலுக்காகப் புதுச்சேரியில் 2 ஓட்டுச்சாவடிகளும், சென்னை மற்றும் காரைக்காலில் தலா 1 ஓட்டுச்சாவடியும், என மொத்தம் 4 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு மக்கள் ஆவலுடன் வந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து, தனிமனித இடைவெளியுடன் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். மாலை 6 மணி வரையிலும் இந்த ஓட்டுப்பதிவு நீடித்தது.
புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது புதுச்சேரி தூதரக தேர்தல் தொகுதி ஆகும். இந்த தொகுதியிலிருந்து பிரெஞ்சு குடிமக்களின் நலன்களை பாதுகாக்கும் 3 முக்கியப் பிரதிநிதிகளை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. இத்தேர்தலில் புதுச்சேரி தொகுதி வாக்காளர் பட்டியிலில் இடம்பெற்றுள்ள மொத்தம் 4,378 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் வெற்றிபெறும் பிரதிநிதிகள் 6 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் இந்த பிரதிநிதிகள் வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுடன், தூதரக கவுன்சிலிலும் உறுப்பினர்களாக செயல்படுவர். குறிப்பாக கல்வி உதவித்தொகை, சமூக நல உதவிகள் மற்றும் உள்ளூர் பிரெஞ்சு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்ட பிரெஞ்சு சமூகத்தை சார்ந்த முக்கிய விவகாரங்களில் இவர்களிடம் ஆலோசனைகள் பெறப்படும். மேலும் வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலிலும் பிரதிநிதிகள் பங்கேற்று ஓட்டளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
