“அதிமுக ஒன்றிணைய வேண்டும்” வீடியோ பதிவிட்டு அதிமுக நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: எடப்பாடி நேரில் அஞ்சலி

 

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் வளைக்கார தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மகேந்திரன்(37). தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர். இவரது மனைவி முனீஸ்வரி(32), மகள் நித்ய(2). மேலும் அவருக்கு ஐந்து சகோதரர்கள் உள்ளனர்.
மகேந்திரன் திருப்பனந்தாள் கடை தெருவில் பூக்கடை நடத்தி வந்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது முதல் மகேந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மகேந்திரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” எனத் தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, வீட்டருகே உள்ள பாலத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், அதிமுக கட்சி ஒன்று பட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும். எனது இறப்புக்கு பிறகாவது கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இருந்து அதிமுகவை மீண்டும் வலிமை பெறச் செய்ய வேண்டும். கட்சி பணியில் எனக்கு வழிகாட்டிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எனது இறப்புக்கு பிறகு எனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று கடைசி நிமிடமாக பேசி வீடியோவை தமது பேஸ்புக்கில் மகேந்திரன் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவினர் அரசு மருத்துவமனை, அவரது வீட்டில திரண்டனர். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரன் உடலை பிரேத திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகேந்திரன் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கூறும்போது, பாதிக்கப்பட்ட மகேந்திரன் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சாவூர் மாவட்ட கழகத்தின் சார்பில் 25லட்சம் என 55 லட்சம் உடனடியாக வழங்கப்படும். மேலும் மகேந்திரனின் ஒன்றரை வயது பெண் குழந்தை படிப்பு செலவு முழுவதையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: