சென்னை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ, பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்காக கலந்தாய்வுக்கு விண்ணப்பம் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே-3ம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்ப பதிவுகளில் இணைய வழி மூலம் 2.81 லட்சம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2.17 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ள நிலையில் 1.84 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். இந்த நிலையில் அதிகப்படியான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால், மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள மாநிலம் முழுவதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து இந்த ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
