நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று மதியம் நின்றிருந்த டெம்போ மீது கார் மோதிதாய், மகன் உள்பட 3 பேர் பலியாகினர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே சிறுமளஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (43). மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அங்கு மனைவி துறைச்சி (37), மகன்கள் அரசு (22), கிஷோர் (17) ஆகியோருடன் வசித்துள்ளார்.
கோடை விடுமுறையையொட்டி துறைச்சி மட்டும் 2 மகன்களுடன், சொந்த ஊரான சிறுமளஞ்சிக்கு வந்திருந்தார். அங்கு உறவினர் மகன் மனோஜ் (23), இரு நாட்களுக்கு முன் விபத்தில் படுகாயம் அடைந்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று மதியம் துறைச்சி, மகன் கிஷோர் மற்றும் உறவினர் சிவகாமி (50) ஆகியோர் ஒரு காரில் நாகர்கோவில் புறப்பட்டனர்.
காரை உறவினர் சுரேஷ் ஓட்டினார். மதியம் 1 மணியளவில் கார், நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் வெள்ளமடம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்றிருந்த டெம்போவின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் கிஷோர், துறைச்சி, சிவகாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுரேஷ் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
* பலியானோர் பார்க்க வந்தவரும் உயிரிழந்தார்
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனோஜ் நேற்று காலையிலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த தகவல் தெரியாமல், மனோஜை பார்க்க வந்தபோதுதான் துறைச்சி, கிஷோர், சிவகாமி ஆகியோர் பலியாகினர். தற்போது மனோஜ் மற்றும் விபத்தில் இறந்த 3 பேர் என 4 பேரின் உடல்களும் மருத்துவக்கல்லூரி பிணவறையில் உள்ளன. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
