×

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்: லோக் பவனில் 3ம் தேதி விழா; முதல் கட்டமாக 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடக மாநில 16வது சட்டப்பேரவை கடந்த 2023 மே 20ல் பதவி ஏற்றது. அதன்படி மாநிலத்தின் 22வது முதல்வராக சித்தராமையாவும் 11வது துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மற்றும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 3 வருடம் நிறைவடைந்த நிலையில் அதிகார மாற்றம் தொடர்பான பேச்சுகள் எழுந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு பெங்களூரு திரும்பிய சித்தராமையா, கடந்த வியாழக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து டிகே சிவகுமார் முதல்வர் என்பது உறுதியான நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலை 4.45 மணி அளவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் , சித்தராமையா, டி.கே. சிவகுமார் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சித்தராமையா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக டி.கே. சிவகுமார் பெயரை முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் டிகே சிவகுமார் மக்கள் பவனுக்கு சென்று அதன் விபரத்தை தெரிவித்து பதவி ஏற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் பதவி ஏற்பு விழா பெங்களூரு மக்கள் பவனில் நடைபெற வேண்டும் என்றும் தன்னுடன் 14 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார் என்கிற விபரத்தையும் டிகே சிவகுமார் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். இதன்படி கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக டிகே சிவகுமார் வரும் 3ம் தேதி மாலை 4.05 மணி அளவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

முதல்வர் பதவி ஏற்பு மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேலிட தலைவர்கள் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, வேணுகோபால், ஜெய்ராம்ரமேஷ், ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவின் போது பெங்களூரு விதான சவுதா மற்றும் மக்கள் பவன் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் மாநகர போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : D.K. Shivakumar ,Chief Minister ,Governor ,Lok Bhavan ,Bengaluru ,16th ,Karnataka ,Legislative ,Assembly ,Siddaramaiah ,22nd Chief Minister ,Deputy Chief Minister ,Congress government ,
× RELATED இன்டர்நெட் பயன்படுத்துவோர்...